Saturday, August 21, 2010

                                              வேட்கை


வெயிலை இரவில் மாட்டி வைத்து
வயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டு
வௌவால் போல ஒட்டிக்கொண்டு
வாயை காதில் ஒட்டிக்கொண்டு
பாதி வெந்து தின்று  விட்டு
மீதிக்கு புகையை மென்று போட்டு
காலை கையாய் ஆக்கிக்கொண்டு
காலை கையாய்  மாற்றிக்கொண்டு
பாய்ந்து பாய்ந்து ஓடி
பறந்து பறந்து தேடி
வாழ்கையின் அர்த்தம்
பொருள் சேர்க்கைத்தானோ!

காத்திருந்த மனைவிக்கு \ கணவனுக்கு
கொட்டாவி தந்து
பார்த்திருந்த பிள்ளைக்கு
பாதி முத்தம் தந்து
கண்களில் மறுகாலையை
ஒட்டிக்கொண்டு
வாழ்க்கையின் அர்த்தம்
பொருள் வேட்கைதானோ
வெயிலும் நிலவும்
வருவதும் ஏனோ !

Sunday, August 15, 2010

                                       ஊர் மாற்றல்


வேர் பிடிக்கும் நேரம்
வெடுக்கென பிடுங்க வரும்
ஊர் மாற்றல் உத்தரவுகள்.

ஊர் பார்க்கும் ஆசையோ
உலகம் பார்க்கும் ஆசையோ
இன்றி
புது வீட்டிற்குள்
புலம் பெயரும்
தனிமைகள்..

பிடிக்காத ஊரிலும்
பிடித்து விட்ட
நண்பனைப் போல
வந்து விடும்
ஒரு மழை.

                                  "பிடித்து" விட்டவை


விரல் பட்டு
நிறப் பொட்டு
அழிந்து விடுமோ
என
"பிடித்தும்"
பிடிக்காமல் விட்ட
ஒரு பட்டாம்பூச்சி t

Friday, August 13, 2010

                                                   அகரம்


அன்பே  தாய்மை
ஆளுமையே பெருமை
இனிமை இனிமை
ஈதல் கடமை
உவமையில்லா இறைமை
ஊன் ஒழித்தல் அருமை
எளிமை குளுமை
ஏற்றம் கொள் திறமை
ஐய்யமில் குழவி இனிமை
ஒப்பிடுதல் குறைமை
ஓயாதே உரிமை
அவ்ஷதம்  முறைமை
எக்கு சேர் இளமை

Monday, August 9, 2010

                                            நாகேஷ்

யாராலும் தயாரிக்க முடியாத
ஒரு படத்தை
கடவுள் அன்று தயாரித்தார்.
அதற்கு எங்கு தேடினும்
 கிடைக்காத
கதாநாயகனாய்
உன்னை
அன்று அவர் படைத்திட்டார்.

நிரந்தர கால்ஷீட்
நீ எங்களுக்கு கொடுத்திருக்க..
"இறந்த ஓர் இருப்பையும்"
எங்களுக்கே தந்திருக்க
"அய்யா ... கடவுளே
வேண்டாம்! வேண்டாம்!
உமக்கு நாங்கள் தருகிறோம்
ஒரு ஆயிரம் வராகன்"
விட்டுவிடு அவரை
எங்களுக்கே என்றோமே!

காசிக்கு போகும் சந்யாசியும்
கங்கைக்கு போகும் பரதேசியும்
இங்கிருக்க...
எங்கிருக்கிறாய்  நீ...

ஒன்றும் அறியா பருவத்தில்
அன்னை
அறிமுகம் செய்த சுவைகளில்
என்றும்  ரசிக்கும்
ஓர் சுவையென
உன்னை எங்கள் உதிரத்தில்
ஊற விட்டாளோ
உறைந்து விட்டதய்யா
உதிரத்தில் உன் நினைவு!

தோல் சிவந்தவர்களுக்கும்
துகிலுரித்தவர்களுக்கும்
தேடி கொடுத்தனர்
பல விருதுகள்
ஏராளம் ஏராளம்.
'மாடிப்படி மாதுவாயினும்'
'எதிர்நீச்சல்' போட்ட உன்னை
ஏனோ மறந்தனர்
இந்த நாகரிக கோமாளிகள்!

'தோன்றலில் சிறந்த'
உன்னை விட்டு
தோற்றலில் சிறந்தவர்க்கு
தேடி பரிசளித்தனர்.
நம்ப முடியவில்லை
இல்லை...

'சுட்ட உடல் எழுந்து நடக்கலாம்'
நீ இறந்து போனாய்
என சொன்ன சொல்
எப்படி உண்மையாகலாம்!

Sunday, August 8, 2010

KAASETHAAN KADAVULAA

காசேதான் கடவுளா! 

காசிடம் ஒப்படைத்த வாழ்க்கை
பேச்சிழந்து போகும் - அது
வேற்றிடம் ஒப்படைத்த வாள் போல
வலுவிழந்து போகும்
கல் சோற்றிடை சேராத நீர் போல 
உறவு விலகியே ஓடும் 
மூச்சமர்ந்த வேளை மொய்த்திட 
ஒரு முகமிழந்து போகும் .

Saturday, August 7, 2010

KAAITHTHA PAZAM

காய்த்த பழம்

"பழம்" விற்பதற்காக
நடந்து நடந்து
"காய்"த்து போயின
கால்கள்!